"யுனிகோடு"க்கு மாறிவரும் "தினமலர்" நாளிதழ்


பொதுவாகத் தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் முன்னணிப் பத்திரிக்கைகள், வார மாத இதழ்களின் இணையதளங்கள் எதுவும் தமிழ் யுனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை.

முக்கியமாக அதிக அளவில் விற்பனையாகும் தினமலர், தினமணி, தினந்தந்தி மற்றும் தினகரன் ஆகிய பத்திரிக்கைகளின் இனையதளங்கள் எதுவும் தமிழ் யுனிகோடு எழுத்துருவைப் பயன்படுத்துவதில்லை. அதே போல் தான், குமுதம், விகடன், குங்குமம் குழுமத்திலிருந்து வெளிவரும் வார, மாத இதழ்களுக்கான இணையதளங்களும்.

தமிழ் இணைய ஆர்வலர்களும் இதைப் பற்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பல முறை எழுதியும், பேசியும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இப்போது தினமலர் மட்டும் தமிழ் யுனிகோடு மீது ஆர்வம் காட்டி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு தனது "தினமலர் வர்த்தகம்" என்ற துணைப்பதிப்பை, முழுவதும் தமிழ் யுனிகோடிலான இணையதளத்தில் ( http://www.dinamalarbiz.com ) வெளியிட்டது. இப்போது தனது முதன்மை பதிப்பான "தினமலர்" நாளிதழக்கான தளத்தையும் யுனிகோடுக்கு மாற்றிவருகிறது.

இப்போதைக்கு 'கடைசிச் செய்திகள்' ( http://www.dinamalar.com/ucode/final.asp ) பக்கத்தை மட்டும் யுனிகோடில் வெளியிட்டுள்ளது. மற்ற பகுதிகள் எல்லாம் இன்னும் TAM எழுத்துருவிலேயே உள்ள்ன. மெதுவாக, மொத்த தளத்தையும்
யுனிகோடுக்கு மாற்றுவார்கள் எனத் தெரிகிறது.

தமிழ் யுனிகோடுக்கு KKR-MALIK என்கிற எழுத்துருவைப் பயன்படுத்துகிறார்கள். இது இவர்களுடைய சொந்த எழுத்துருவாக இருக்கலாம்.

இதையே, மற்ற பத்திரிக்கைகளும் பின்பற்றி யுனிகோடுக்கு மாறினால், இந்த எழுத்துருப் பிரச்சனையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விடுபடலாம். விரைவில் நடக்கும் என்று நம்புவோம்.